search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை மரம் சேதம்"

    சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சேதம் அடைந்தன. #Rain

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து அந்த பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வாழப்பாடியை அடுத்த துக்கியம்பாளையம் கிராமத்தில் சூறைக்காற்று வீசியதால் வீட்டு கூரைகள் சேதம் அடைந்தது. ஆட்டோ ஓட்டுநர் பிச்சமுத்து என்பவர் வீட்டு கூரை சூறைக்காற்றில் 50 அடி தூரத்திற்கு பறந்து சென்று விழுந்தது.

    ஆத்தூர் நரசிங்கபுரம், கெங்கவல்லி சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5.30 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் சூறைக்காற்றுடன் ஆத்தூரில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனை அந்த பகுதி சிறுவர்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர்.

    இந்த மழை 2 மணிநேரத்திற்கும் மேல் கனமழையாக நீடித்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்தூர் 18-வது வார்டு காலனி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல வீடுகள் பாதியளவு தண்ணீரில் மூழ்கின.

    இதனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். மழையைத் தொடர்ந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதேபோல தலைவாசல், பட்டுத்துறை, தேவியாக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    தம்மம்பட்டி, செந்தாரப் பட்டி, நாகியம்பட்டி, கொண்டையம்பள்ளி, கூடமலை, கிருஷ்ணாபுரம், தெடாவூர், வீரகனூர் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொங்கணாபுரத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் கொங்கணாபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் கன்னந்தேரி அருகே ஒண்டிப்பனை பகுதியில் புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    சங்ககிரியில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணிநேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மேலும் சங்ககிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொமரநல்லிபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் செல்லம்மாள் என்பவரது தொகுப்பு வீடு மழையில் இடிந்து விழுந்தது. மேலும் அந்த பகுதியில் 8 தொகுப்பு வீடுகள் பழுதடைந்தன.

    ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் நேற்றிரவு 2 மணிநேரத்திற்கும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சிக்கனம்பட்டி, குப்பூர் உள்பட பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சேதம் அடைந்தன.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தவித்து வருகிறார்கள். ஓமலூர் பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட டி.வி. பெட்டிகள் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்தன.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆத்தூர் - 98.6, தம்மம்பட்டி - 58.4, சங்ககிரி - 56, கெங்கவல்லி - 52.4, மேட்டூர் - 51.4, ஓமலூர் - 23.4, கரியகோவில் - 19, ஆனைமடுவு - 17, சேலம் - 13.8, காடையாம்பட்டி - 9.6, ஏற்காடு - 9.4, எடப்பாடி - 3, பெத்தநாயக்கன் பாளையத்தில் 2 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.  #Rain

    ×